பல்லடம் : திருப்பூரில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் கோகுல்நாத், 33. பஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு எனும் சி.என்.ஜி.,யை எரிபொருளாக வைத்து இயங்கும் பஸ்சை, திருப்பூர் - பல்லடம் - புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கோகுல்நாத் கூறியதாவது:
டீசல் விலை லிட்டர் தற்போது, 94 ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்னர், தினமும் 3,500 பயணியர் வரை பஸ்சில் வருவர். இப்போது, 2,500 பயணியர் வருவதே பெரிய விஷயம்.
பெரிய அளவு லாபம் இல்லை. சி.என்.ஜி., மூலம் கேரளாவில் இயங்கிய பஸ்சை சென்று பார்த்தேன். அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக சி.என்.ஜி., பஸ்சை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
டீசல் என்றால், தினமும், 7,000 ரூபாயும், சி.என்.ஜி., என்றால் பஸ்சுக்கு, 5,000 ரூபாய் வரையும் செலவாகும். மொத்தம், 90 கிலோ கொண்ட ஒரு சிலிண்டருக்கு, 450 கி.மீ., மைலேஜ் கிடைக்கும். இது, 600 லிட்டர் டீசலுக்கு இணையானது. மேலும், காற்று மாசு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.