சென்னை: சென்னையில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கான, விரிவான தொழில்நுட்ப பொருளாதார திட்ட அறிக்கை தயாரிக்க, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' எனும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தை, தற்போது ஆண்டுக்கு, 1.7 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், 4,700 ஏக்கர் பரப்பில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த விமான நிலையம், ஆண்டுக்கு, 10 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, டிட்கோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, டிட்கோ வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்பு:
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தேவையான, விரிவான தொழில்நுட்ப பொருளாதார திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
அதில், தற்போதைய தேவை மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகள் இடைவெளியில், 2069 - 2070ம் ஆண்டு வரையிலான, பயணியர், விமானங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பான எதிர்கால கணிப்புகள் இடம்பெற வேண்டும்.
![]()
|
உயரமான கட்டடங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், மின் கோபுரங்கள் உட்பட, விமான சேவை பாதிக்கக் கூடிய தடைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
விமான நிலைய முனையம், ஓடுபாதை, வணிகப் பகுதி உட்பட ஒருங்கிணைந்த கட்டமைப்பு, விமான பராமரிப்பு மற்றும் பழுதுநீக்குதல் உட்பட, அனைத்து வசதிகள் குறித்து முழுமையான திட்டம் தயாரிக்க வேண்டும்.
திட்டத்திற்கான கட்டமைப்புகளை அடையாளம் கண்டு, அதற்கான மேம்பாட்டு கட்டங்கள், உத்தேச செலவு மற்றும் அதற்கான நிதி பெறும் முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள, இரண்டாவது விமான நிலைய கொள்கைக்கு ஏற்ப, தொழில்நுட்ப விரிவான திட்ட அறிக்கை இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் நிர்வாக திட்டம் மற்றும் சமூக பாதிப்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.