காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு நிலங்களின் 3,252 சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்டுள்ளன. இன்னும் 3,096 சர்வே எண்கள் விசாரிக்கப்பட்டு 'பிளாக்' செய்யும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் பணியாற்றி வருகின்றனர். சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்ட நிலங்கள், வரும் காலங்களில் பட்டா பெறவோ அல்லது நிலத்தின் தன்மையை மாற்றவோ முடியாது. மோசடியாக பட்டா பெற்று வைத்திருந்த சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டால், பட்டா பெயர் மாற்றம், சப் - டிவிஷன் செய்தல் மற்றும் விற்பனை போன்ற எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது.

தமிழகத்தில் அரசு நிலங்களின் வகைப்பாடுகளில் ஒன்றான, அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகிய அனாதீனம் நிலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்கள் அரசு திட்டங்களுக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் அரசே நேரடியாக பயன்படுத்தி வருகிறது.
அதேசமயம், அனாதீனம் நிலங்களை அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் பலரும் மோசடி ஆவணங்களை கொண்டு பட்டா பெற்ற சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன.
வருவாய் துறை தீவிரம்
பல ஆண்டுகள் கழித்து, விசாரணையில், அனாதீனம் நிலம் என்பது தெரியவந்து, வருவாய் துறை அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
மேலும், நுாற்றுக்கணக்கான ஏக்கர் அனாதீனம் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அவற்றை பாதுகாக்கவும், மோசடியாக பட்டா பெறுவதை தடுக்கவும் அனாதீனம் நிலங்களின் சர்வே எண்களை 'பிளாக்' செய்யும் நடவடிக்கைகள், வருவாய் துறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அதிக அனாதீனம் நிலங்கள் இருக்கும் மாவட்டங்களில், காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அனாதீனம் நிலங்களின் சர்வே எண்களை பிளாக் செய்யும் பணிகள் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனாதீனம் நிலங்களின் தற்போதைய நிலை குறித்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என வருவாய் துறை அதிகாரிகள் மட்டத்தில் அனைவரும் ஆய்வு செய்த பிறகு, அனாதீனம் நிலங்களின் சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்படுகின்றன.

ஐந்து தாலுகாக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் என ஐந்து தாலுகாக்களில், இதுவரை 3,252 சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் 3,096 சர்வே எண்கள் உள்ள அனாதீனம் நிலங்கள் விசாரித்து 'பிளாக்' செய்யப்படவுள்ளன.
சர்வே எண்கள் 'பிளாக்' செய்யப்பட்ட நிலங்கள், இனி வரும் காலங்களில் பட்டா பெறவோ அல்லது நிலத்தின் தன்மையை மாற்றவோ முடியாது.
மோசடியாக பட்டா பெற்று வைத்திருந்த சர்வே எண்கள் பிளாக் செய்யப்பட்டால், பட்டா பெயர் மாற்றமோ அல்லது சப் - டிவிஷன் போன்ற எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது.
அனாதீனம் என்றால் என்ன
அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது. இந்த நிலங்களை இப்போது வைத்திருப்போருக்கு அரசு பட்டா வழங்குவதில்லை. பதிவுத்துறையில் நிலங்களை பதிவு செய்திருந்தாலும், பலர் இன்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.