தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'மன்னராட்சியிலும், மக்களாட்சியிலும், கோவில் மக்களுக்கானது. அரசை குறை கூற முடியாதவர்கள், மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்; உண்மை. அந்த கோவில்களின் நிர்வாகம் இருந்ததும், இருக்க வேண்டியதும் மக்களிடத்தில் தான்; அரசிடம் அல்ல. மத ரீதியான வாக்குகளைப் பெற, மத துவேஷத்தை முன் வைத்து அரசியல் செய்வதால் தான், அரசை குறை கூறுகின்றனர்.
கோவில்களை மதம் சார்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகி நின்றால், பிரச்னைக்கே இடமில்லையே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

மாநில பாடத் திட்டத்தின், ஆறாம் வகுப்புக்கான கணித பாட நுாலில், சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடம் உள்ளது. குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கும் அந்த பாடத்தை நீக்க வேண்டும் என, பா.ம.க., கடந்த ஆண்டே வலியுறுத்தியது; ஆனாலும், நீக்காதது கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு, இந்த சம்பவமே சாட்சி!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:
'ஆன்லைன்' சூதாட்ட தடை மசோதா பற்றி, கவர்னர் ரவியை நேரில் சந்தித்து, சட்ட அமைச்சர் விளக்கம் அளித்தும், ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஆளுங்கட்சியிடம் இருந்து உத்தரவு வந்துடுச்சு போலிருக்கு!
பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி:

தி.மு.க., ஆட்சியில் ஒழுக்கக் கேடான செயல்கள் அதிகரித்து விட்டன. திருச்சி போன்ற ஆன்மிக நகரத்தில், கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிராக, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, மது போதையில் கூத்தடிக்கும், 'பப், பார்' துவங்கும் நிலை உள்ளது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தும், பா.ஜ., கட்சியினரை, தி.மு.க., அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது.
இது ஒபோன்ற செயல்கள், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கே உதவும்என்பது, ஆளுங்கட்சிக்கு தெரியலை போலும்!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு:

தமிழக அரசு ஆலயப் பணி புரட்சியாக, திருக்கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு விழாக்களை நடத்தி வருகிறது; மேலும், கோவில் குளங்கள் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வந்துள்ளன; கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தின் கீழ், அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் தான் ஆன்மிகப் புரட்சி, ஆலயப் புரட்சி நடைபெறுகிறது.
'கோவில்களின் நகைகளை உருக்கி, வங்கியில் அடமானம் வைப்பது கூட ஆலயப் புரட்சியா?' என்ற கேள்வி எழுகிறதே!