வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் பயங்கரவாதம் நிலவி வருகிறது என கவலை தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
கஜகஸ்தான், கிரிகிஸ்தான்,தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் ஆகியோருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆலோசனை நடத்தினார். துருக்மெனிஸ்தான் சார்பில், அந்நாட்டிற்கான இந்திய தூதர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது: இந்தியாவின் கவலைகள் மற்றும் இலக்குகள் மற்றும் முன்னுரிமை ஆகியவையே, இந்த கூட்டத்தில் உள்ள நாடுகளும் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத குழுக்கள் இருப்பது மிகவும் கவலைக்குரியது. நிதியுதவியே, பயங்கரவாதத்திற்கு உயிர்நாடியாக உள்ளது. அதனையும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதையும் முக்கிய நோக்கமாக வைத்திருக்க வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றவும், பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை குழு உறுப்பினர்கள் கேட்டு கொள்ள வேண்டும்.
மத்திய ஆசிய நாடுகளுடனான இணைப்புக்கு, இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் இணைப்பை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.