சென்னை: உலகளவில் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ‛ஜி-20' மாநாடு தொடர்பான அனத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக சார்பில் கலந்துகொள்ளுமாறு அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அழைத்தது. இதன் மூலம் எடப்பாடி தலைமையில் இருப்பது தான் உண்மையான அதிமுக என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்கிறது. ஜி20 மாநாடை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து பிரதமர் மோடி நேற்று (டிச.,5) ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அதிமுக சார்பில் அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் மத்திய அரசு அழைத்தது. ‛நான் நடத்துவதும் அதிமுக தான்' என்று சொல்லிவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு இல்லை. இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியையும், எடப்பாடி தரப்புக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

ஏற்கனவே அதிமுக.,வின் பொதுச்செயலாளர் யார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடியவில்லை. அதனாலேயே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். கட்சியின் அங்கீகாரம் பற்றிய விசாரணையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தான் ஜி20 மாநாட்டுக்கு அழைத்ததன் மூலம் அதிமுக.,வின் ஒரே தலைவர், கட்சியை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று மத்திய அரசு மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கட்சியும் அதிமுக ஓட்டு வங்கியும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருக்கிறது என மத்திய அரசு நினைக்கிறது. எதிர்காலத்தில் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் முக்கியத்துவம் தரப்படும் என்பது இதன்மூலம் தெரிகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தனது சார்பில் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்துவரும் ஓபிஎஸ், இலவு காத்த கிளியாக இருக்கிறார். இனிமேல் ஓபிஎஸ்.,க்கு பா.ஜ., அரசு தரும் முக்கியத்துவமும் குறைந்துவிடும் என்று கருதப்படுகிறது.