கம்பம், டிச. 7 - கம்பம் உழவர் சந்தையில் பையில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை தவறவிட்ட பெண்ணிடம், உழவர் சந்தை பணியாளர் எடுத்து கொடுத்து பாராட்டை பெற்றார்.
கம்பம் உழவர் சந்தையில் 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். அதிகாலை முதல் பிற்பகல் வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று காலை கம்பம் நகராட்சி தெரு, சுக்காங்கல்பட்டியை சேர்ந்த ஜமுனா என்ற பெண் காய்கறி வாங்க வந்துள்ளார். காய்கறி வாங்கி கொண்டு, திரும்பும் போது 2 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் வைத்திருந்த மஞ்சள் பையை தவறவிட்டு சென்றுள்ளார்.
பையை எடுத்த உழவர் சந்தை காவலர்கள் கார்த்திக் மற்றும் சசிக்குமார் ஆகிய இருவமும், பையை உழவர் சந்தை துணை நிர்வாக அலுவலர் மாரிச்சாமியிடம் ஒப்படைத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த பெண் அழுது கொண்டே உழவர் சந்தைக்கு வந்தார்.
அவரை அழைத்த துணை அலுவலர் மாரிச்சாமி விபரங்களை கேட்டு உறுதி செய்த பின், நகை மற்றும் பணம் அடங்கிய பையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். உழவர் சந்தை பணியாளர்களின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினார்கள்.