வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை எனவும், எங்களுக்கு ஐந்து விரல் போதும், ஆறாவது விரலான கவர்னர் தேவையில்லை, வெட்டி எறிய வேண்டுமு் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
அம்பேத்கரின் 66வது நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓட்டுக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பா.ஜ., பேசி வருகிறது. ஓட்டுக்காக எந்த அளவிற்கும் பா.ஜ., செல்லும். வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில் சிலை வச்சாங்க?. நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் பட்டேலா? இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை யாருக்காவது தெரியுமா? குஜராத் தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‛இந்த வெற்றிக்கு விஷம் குடித்து சாகலாம்.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் தான் இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது. தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. எங்களுக்கு ஐந்து விரல் போதும். ஆறாவது விரலாக கவர்னர் உள்ளார். அதான் பிரச்னை; அதனால் தான் மோதல் போக்கு ஏற்படுகிறது. அதனை வெட்டி எறியவேண்டும்.
தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது இல்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு ஏன் கையெழுத்து போடவில்லை? காசு வாங்கிட்டு கமிஷன் வாங்கிட்டு இருக்கிறார்.
பார்லிமென்ட் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள். டில்லியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பார்லி., கட்டடத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.