வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், பா.ஜ., அலுவலகத்தை தாண்டிய போது, அங்கு கூடியிருந்த அக்கட்சியினரை பார்த்து 'பிளையிங் கிஸ்' கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுலின் 'பாரத் ஜோடோ யாத்திரை' ராஜஸ்தானில் நேற்று முன்தினம்( டிச.,5) முதல் நடந்து வருகிறது. இன்று காலை கேல் சங்குல் என்ற இடத்தில் இருந்து யாத்திரை துவங்கியது. அதில், ராகுலுடன், முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், மாநில காங்., தலைவர் கோவிந்த் சிங் மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடந்தனர்.

இந்த யாத்திரை சிறிது நேரத்தில் ஜல்வார் நகரை கடந்து சென்றது. அங்கிருந்த பா.ஜ., அலுவலகத்தையும் இந்த யாத்திரை கடந்தது சென்றது. அப்போது, பா.ஜ., அலுவலக மாடியில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அவர்களை பார்த்த ராகுல், 'பிளையிங் கிஸ் ' கொடுத்துவிட்டு, அவர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடிக்கு ஆதரவாக கோஷம்

இதற்கு முன்பும், ம.பி., மாநிலம் மால்வா மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த ராகுலின் பாத யாத்திரையின் போது, அங்கு கூடியிருந்த பலர் ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர். அவர்களை பார்த்த ராகுல், பாத யாத்திரையில் பங்கேற்கும்படி கூறினார்.
இருப்பினும் அவர்கள் கோஷம் போடுவதை நிறுத்தவில்லை. இதனை தொடர்ந்து, அவர்களை நோக்கி 'பிளையிங் கிஸ்' கொடுத்துவிட்டு பாத யாத்திரையை தொடர்ந்தார். இந்தூர் நகரிலும் ராகுலின் பயணத்தின் போது, 'மோடி மோடி ' என பலர் கோஷம் போட்டது குறிப்பிடத்தக்கது.