பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெருவில், இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் கல்லை போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் இளைஞரை சுற்று வளைக்கும் கும்பல் ஒன்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது.
அந்த கும்பலில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். பின்னர் அந்த இளைஞரை தெருவில் இழுத்து வந்து பலத்த அடி கொடுத்து, அவரது தலையில் கல்லைப் போட்டு, அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பதாமி பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பது தெரிய வந்துள்ளது. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த இளைஞர் கொலை செய்யப்படதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீசார், இந்த கொடூர கொலையை செய்தவர்களை தேடி வருகின்றனர். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் எற்படுத்தி வருகிறது.