புதுடில்லி: தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி டில்லி உயர் நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது திரையிடல் நிகழ்வு கோவாவில் நடந்து முடிந்தது. இஸ்ரேலை சேர்ந்த திரைப்பட இயக்குனர் நடாவ் லபிட், விழா நடுவர் குழுவுக்கு தலைமை வகித்தார். இதில், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையிடப்பட்டது.
திரைப்பட விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இயக்குனர் நடாவ் லபிட் பேசும்போது,'' இந்த படம் பிரசாரத்தை முன்வைக்கிறது. மிக மோசமான கருத்துகளை பேசுகிறது. இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற மதிப்புமிக்க அரங்கில் திரையிட தகுதியற்றது'', என கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் குறித்து அவதூறான கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் விமர்சித்து பதிவிட்டுருந்தார்.

இந்த பிரச்சனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி டில்லி உயர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.