வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ''தமிழகத்தின் கலாசார விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்'', என ஜல்லிக்கட்டு வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014ல் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் போட்டி நடத்தி வருகிறது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து , 'பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்களை கேஎம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்துகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி வாதாடும் போது, விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய பார்லிமென்ட், சட்டசபைக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக விலங்கு வதை தடுப்பு சட்டம் இயற்ற சட்டசபைக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேக கலாசாரத்தை கொண்டுள்ளது.
சிலர் , சைவ உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாசாரமாக உள்ளது. இதனால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் இறைச்சி சாப்பிடும் அசைவ பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா?
விலங்குகள் பலியிடுவது என்பது மதத்தின் ஒரு அங்கமாக கூட இருக்கிறது. தற்போதைய சூழலில் விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலுமாக தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு, ஜாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடும் போது, தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்? மாவட்ட கலெக்டர் குழு ஆய்வுக்கு பிறகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஜல்லிக்கட்டுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியது சட்டப்பூர்வமானது. மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.