திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் திருத்தணியில் நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், அரக்கோணம் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவீந்திரா பேசுகையில், 'மேடையில் அமர்ந்திருப்போர் வளமாக உள்ளனர். கீழே அமர்ந்திருக்கும் கிளை செயலர்கள் வருவாய் இன்றி, தினசரி செலவுக்கு கூட பணமின்றி தவிக்கின்றனர்.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும், நம்மால் ஆடு, மாடு, கோழி கூட வாங்க முடியவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கூட, நம்ம கட்சிக்காரங்க ஆடு, மாடு வாங்கி வாழ்வாதாரத்தை பெருக்கினர்; இப்ப ஒரு பிரயோஜனமும் இல்லை' என்றார்.
அவர் பேசியதை கேட்ட கிளை செயலர்கள், கை தட்டி ஆரவாரம் செய்ய, மூத்த நிருபர் ஒருவர், 'இவரு புலம்புறதை பார்த்தா, அடுத்த எலக் ஷன்ல, இவரே அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.