'இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி வந்தாலும் வந்தது; நம் நிலைமை தான் திண்டாட்டமாகி விட்டது...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரில், உலக கோப்பை கால்பந்து போட்டி கள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும், சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளுக்குத் தான் ரசிகர்கள் அதிகம்.
இதனால், பெரும்பாலான உலக நாடுகளில் கால்பந்து ஜுரம் அனல் அடிக்கிறது. நம் நாட்டில் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கால்பந்து போட்டிக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். சர்வதேச கால்பந்து பிரபலங்களுக்கு, இங்கு ரசிகர் மன்றங்களும் உள்ளன. தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா அணிகளுக்கு, கேரளாவில் வெறி பிடித்த ரசிகர்கள் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும், இந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்கு ரசிகர்களாக உள்ளனர். சமூக வலைதளங்களில் தங்கள் ஆதரவு அணிகளுக்காக இவர்களும், இவர்களின் ஆதரவு தொண்டர்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கருத்துப் பதிவு, இப்போது மோதலாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களுக்கு வெளியிலும் இந்த மோதல் உருவெடுத்து, ஆங்காங்கே இரண்டு குழுவாக பிரிந்து மோதிக் கொள்கின்றனர். துவக்கத்தில் வார்த்தை தகராறாக இருந்த மோதல், இப்போது அடிதடி, மண்டை உடைப்பு வரை வந்துள்ளது.
'உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து முடிவதற்குள், கட்சிக்குள் இன்னும் என்னென்ன களேபரம் நடக்க காத்திருக்கிறதோ...' என கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார், முதல்வர் பினராயி விஜயன்.