அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: பிரதமர் மோடி தலைமையில், 'ஜி - 20' உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் பங்கேற்றதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
டவுட் தனபாலு: மாநாட்டு ஆலோசனை கூட்டத்துக்கு, மத்திய அரசு அழைச்சதுல உங்களுக்கு கிடைச்ச பெருமை, மகிழ்ச்சியை விட, பன்னீர்செல்வத்தை அழைக்காம விட்டதுல கிடைச்ச பெருமையும், மகிழ்ச்சியும் தான் அதிகம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்: முதல்வர் செயல்படுத்தும் திட்டங்கள் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியாவின், 'நம்பர் ஒன்' முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என, முதல்வர் பிரித்துப் பார்ப்பதில்லை; அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் தமிழகம் வந்துள்ளனர் என, கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
டவுட் தனபாலு: கணக்கெடுப்பு நடத்தி என்ன பிரயோஜனம்... ஹோட்டல்கள் துவங்கி, முடி திருத்தும் சலுான்கள் வரை, வட மாநிலத்தினர் தான் அதிக அளவில் பணிபுரிகின்றனர்... நம்ம ஊர் ஆட்களுக்கு, யாரும் வேலை தர மாட்டேங்கிறாங்களா அல்லது நம்மாட்கள் இங்க வேலை செய்ய பிடிக்காம வேற மாநிலங்களுக்கு போயிட்டாங்களா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!
பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா என அ.தி.மு.க.,வினர் நான்கு அணிகளாக, தனித்தனியாக வந்து மரியாதை செலுத்தினர்.
டவுட் தனபாலு: ஹூம்... மேற்கண்ட நாலு பேருமே, போயஸ் கார்டன்ல, ஜெ., கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, கைகட்டி, வாய் பொத்தி சேவகம் ஆற்றியவங்க தான்... இன்னைக்கு இவங்களது கோஷ்டி கானத்தை பார்த்து, அந்த சமாதிக்குள்ள இருக்கும் ஜெயலலிதாவின் ஆன்மா, ரத்தக்கண்ணீர் வடிச்சிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!