'டாஸ்மாக்' சரக்கும், பிரியாணியுமே மிச்சம்!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அண்ணாதுரை காலத்திற்கு பின், கருணாநிதியின் குடும்ப சொத்தாகி விட்டது,
தி.மு.க., அதற்கேற்ற வகையில், அக்கட்சியில் வாரிசு அரசியலானது ஆல் போல்
தழைத்து வருகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம், தி.மு.க.,வின் இளைஞர் அணி
செயலராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, மீண்டும்
நியமிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி இருக்கும் வரை, மு.க.ஸ்டாலினே இளைஞரணி செயலராக இருந்தார். அந்த வரிசையில், தற்போது உதயநிதி அந்தப் பதவியை ஏற்றுள்ளார்.
தன்
குடும்ப வாரிசுகளுக்கு போட்டியாக, கட்சியில் யாராவது உருவாகின்றனர்
என்றால், அவர்களை கட்டம் கட்டி, வீண் பழி சுமத்துவது கருணாநிதி பாணி. அந்த
வரிசையில் முதல் பலிகடா எம்.ஜி.ஆர்., இரண்டாவது பலிகடா வைகோ.
தற்போது,
தி.மு.க.,வில் உள்ள அமைச்சர்களும், கட்சி யின் மூத்த நிர்வாகிகள் பலரும்,
கருணாநிதி பாணியை பின்பற்றி, தங்களின் வாரிசுகளையும் அரசியலில் நுழைத்து
வருகின்றனர். இதன் வாயிலாக, வாரிசுகளே வாழையடி வாழையாக வாழ, தி.மு.க.,வில்
வகை செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், தி.மு.க.,வே உயிர் மூச்சு
என, வாழும் ஏராளமான உடன்பிறப்புகளுக்கு, கட்சியில் மதிப்போ, மரியாதையோ
கிடைப்பதில்லை. காரணம், அவர்களிடம் பண வசதியில்லை என்பதே. இதனால்,
தங்களுக்கும் காலம் வரும் என காத்திருக்கும், கழக தொண்டர்கள் பலருக்கு,
கட்சிப் பதவி பகல் கனவாகவே போகிறது என்பதில் சந்தேகமில்லை.
எப்படியோ
ஸ்டாலின் உட்பட, சில தலைவர்களின் குடும்பங்கள் வாழ, மாநிலம் முழுதும் உள்ள
தி.மு.க., தொண்டர்கள் மாடாய் உழைக்கின்றனர். அவர்களுக்கு கிடைப்பது
என்னவோ, 'டாஸ்மாக்' சரக்கும், பிரியாணி பொட்டலமும் தான். கட்சியிலேயே சமூக
நீதியை பின்பற்ற முடியாத இவர்கள், ஊரெல்லாம் அதுபற்றி வாய்கிழிய பேசுவது
வெட்கக் கேடு!
மாற்றம் கண்டு வரும் ஜம்மு - காஷ்மீர்!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
------------------------துப்பாக்கி சத்தமும், வன்முறையுமாக இருந்த, ஜம்மு -
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், தற்போது, இயல்பு நிலை மெல்ல மெல்ல
திரும்புகிறது. அரசு வேலையை மட்டுமே தேடிக் கொண்டிருந்த காஷ்மீர்
இளைஞர்கள், சுயதொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகின்றனர்.
இங்குள்ள
பாரமுல்லா மாவட்ட நிர்வாகம், இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்த
மேற்கொண்ட முயற்சியின் பலனாக, ரிஸ்வான் என்ற, 30 வயது பொறியியல் பட்டதாரி,
காளான் வளர்ப்பு வாயிலாக, மாதம், ௨௦ ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக
கூறுகிறார்.
இதன் வாயிலாக, தனக்கு நிதி ஆதாயம் கிடைப்பதோடு,
தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோல, பல
இளைஞர்களின் வாழ்க்கையில், மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசு வேலையையே
நம்பியிருக்காமல், சுயதொழிலுக்கு மாறி வருகின்றனர்.
ஜம்மு -
காஷ்மீரில், அடுத்த ஆண்டில், 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள்
வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தொழில் நிறுவனங்கள், ஜம்மு -
காஷ்மீரில் நிலங்களை சொந்தமாக்கி கொள்கின்றன.
'வால்நட், ஆப்பிள்,
குங்குமப்பூ உற்பத்தியில், நாட்டிலேயே முதன்மையாக உள்ளது காஷ்மீர். மருந்து
கம்பெனிகள், உணவு பதப்படுத்துதல், மருத்துவ சிகிச்சை மையங்கள், கல்வி
நிலையங்கள்.
'சரக்கு போக்குவரத்து, குளிர்சாதன கிட்டங்கிகள்
அமைத்தல் மற்றும் திரைப்பட தயாரிப்பு துறைகளுக்கு, இங்கு பிரகாசமான
வாய்ப்பு தெரிகிறது. அன்னிய முதலீடுகளும் வரத் துவங்கியுள்ளன' என்கிறார்,
ஜம்மு - காஷ்மீர் தலைமை செயலர் அருண்குமார் மேத்தா.
இன்னும் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும், முழு அளவில் உருவாக மூன்று ஆண்டு களாகும் என, கூறப்படுகிறது.
அப்படி
உருவாகும் போது, ஜம்மு - காஷ்மீர், வன்முறை களம் என்ற பிம்பம் மறைந்து,
அந்த யூனியன் பிரதேசமும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் என்பதில்
சந்தேகமில்லை. இதற்கெல்லாம், பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு எடுத்த
துணிச்சலான நடவடிக்கைகளே காரணம்!
வீரமணிக்காக பேசிய ஸ்டாலின்?
ஆர். கோவிந்தராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழக தலைவர் வீரமணியின், 90வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வீரமணியை அதிகம் புகழ வேண்டும் என்பதற்காக, ஒரு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்...
அதாவது, எமர்ஜன்சி எனப்படும், அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த போது, ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த நேரத்தில், சிறைத் துறையினர் தன்னை கடுமையாகத் தாக்க முற்பட்ட போது, தன் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கிக் கொண்டார் என்று சொன்னது ஆச்சர்யமாக உள்ளது. இதுநாள் வரை, சிறையில் தன் மீது விழவிருந்த அடிகளை, சிட்டிபாபு என்பவர் தான் தாங்கிக் கொண்டார் என்று கூறி வந்தார் ஸ்டாலின்... இப்போது மாற்றிக் கூறியுள்ளார்.
ஸ்டாலின் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கிக் கொண்டார் என, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியே, எந்த இடத்திலும் சொன்னதாக தகவல் இல்லை. அதேபோல, தி.மு.க., பேச்சாளர்கள் யாரும் இதுபற்றி பேசியதாக செய்திகளும் வந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், வீரமணியே எங்கும், இந்தத் தகவலை சொன்னதாக தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, ஸ்டாலின் பேசி அமர்ந்த பின் பேசிய வீரமணியும், 'சிறையில் நாங்கள் அனைவரும், கடும் துன்பத்தை அனுபவித்தோம்' என்று தான் பொதுவாக பேசினாரே தவிர, ஸ்டாலின் கூறியதை வழி மொழியவில்லை; உண்மை என ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படி சிறையில், ஸ்டாலின் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கியிருந்தால் இவ்வளவு காலமாக யாரும் ஏன் சொல்லவில்லை? இப்போது புதிய தகவலாக சொல்வானேன். ஒரு வேளை வீரமணியின், 90வது பிறந்த நாளில், நாட்டு மக்களுக்கு இதை சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலின் காத்திருந்தாரா என்பது, அவருக்கே வெளிச்சம்.
தி.க., தலைவர் வீரமணியை, அதிகம் புகழ வேண்டிய நிர்பந்தம் முதல்வருக்கு இருப்பதாலோ என்னவோ, அவரது, 90வது பிறந்த நாள் 'பம்பர்' பரிசாக, இப்படியொரு பொய்யான, 'அன்பளிப்பை' முகஸ்துதியாக தெரிவித்துஇருக்கலாம்.
அதேநேரத்தில், பொய் சொல்வதிலும், மக்களை ஏமாற்றுவதிலும், தி.மு.க., தலைவர்கள் வல்லவர்கள் என்பதை, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.