மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை: 'ஜி 20' அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட, 20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இப்போது நாம் தலைவர். இந்தச் சாதனை மகத்தானது. இம்மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது. இதை தனிப்பட்ட அரசியல் கட்சிகள் சாதித்தன என்று சொந்தம் கொண்டாட முடியாது. இதை செய்து முடிக்க நமக்கு, 75 ஆண்டுகளாகி உள்ளது. ஒரு தேசமாக நாம் பெருமை கொள்ளத்தக்க தருணம் இது.
* இவ்வளவு பேசுறாரே... இந்த சாதனையில இவரது பங்களிப்பு ஏதும் இருக்குதா, என்ன?
***
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், சத்துணவு திட்ட சீரமைப்பு என்ற பெயரில், 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட, அரசு திட்டமிட்டு இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 3 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் நோக்கம், 3 கி.மீ., சுற்றளவில் உள்ள அனைத்து மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை, ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து வழங்குவதாக இருக்க வேண்டும். இது, தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்கச் செய்து விடும்.
இதுவே, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்திருந்தால், தி.மு.க.,வினர் போர்க்கோலம் பூண்டிருப்பாங்களே!
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை பேட்டி: லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் கிடையாது. இயக்கத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் நிர்பந்தித்தால், அதை ஏற்கும் நிலையில் உள்ளேன். மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியில், பா.ம.க., மட்டுமல்ல, வேறு எந்த மதசார்பற்ற இயக்கம் இணைந்தாலும், மகிழ்ச்சி தான்!
பா.ம.க.,வை சேர்த்துக்கிட்டா, உங்க பங்கு குறைஞ்சிடும்... பரவாயில்லையா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க.,வில் குமுறல் எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் ஆர்.எஸ்.பாரதி பேச்சு. அடுத்தடுத்து நிறைய பேர் வருவர். முதல்வருக்கு கட்சி, ஆட்சி குறித்து கவலை இல்லை. மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்ற கவலை தான் உள்ளது. ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. இங்கிருந்து சென்ற எட்டு பேர் தான் ஆட்சி செய்கின்றனர். அதை ஸ்டாலினே கூறி விட்டார். 'சேகர்பாபு தான் என்னை வழி நடத்துகிறார்' என்கிறார்.
உங்களிடம் இருந்து போனவங்க தான், இந்த ஆட்சியை இயக்குறாங்க என்பது உங்களுக்கு பெருமை தானே... அப்புறம் ஏன் ஆட்சியை திட்டுறீங்க?
முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா பேட்டி: விரைவில், அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்று சேருவர். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். ஜெயலலிதா வழிதான் என் வழி. எனக்கு தனி வழி கிடையாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு யார் துரோகம் செய்தது என்பது நன்கு தெரியும்.
ஜெயலலிதாவை பாதுகாப்பு அரணா வச்சுக்கிட்டு இவங்க செய்த, 'நன்மை' எல்லாம் போதாதா?