''நசிமுதீன் தள்ளி உட்காரும்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''இளம் வீரர்களை விளையாட விடாம, அதிகாரிகள் கட்டைய போடுதாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, நுங்கம்பாக்கத்துல டென்னிஸ் வீரர்கள் பயிற்சி எடுக்க, அருமையான விளையாட்டு அரங்கம் இருக்குல்லா... அங்கன மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தினமும் காலையில வந்து டென்னிஸ் விளையாடுதாவ வே...
''அவங்க விளையாடும் போது, மற்ற யாரையும் விளையாட அனுமதிக்கிறது இல்ல... பயிற்சி பெற வர்ற இளம் வீரர்கள், விளையாட முடியாம காத்து கிடக்காவ வே...
''குறிப்பா, ஓய்வு பெறப் போகும் மூத்த ஐ.ஏ.எஸ்., ஒருத்தர், தன் நண்பருடன் விளையாடும் போது, 'வேற யாரையும் அனுமதிக்கக் கூடாது'ன்னு கண்டிப்பா உத்தரவு போடுதாரு... அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாம, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கம்முன்னு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
உடனே, ''முதல்வர் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்துக்கு போறதை செய்தித் துறை அதிகாரிகள் தவிர்க்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன காரணம்னு சொல்லும்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''முதல்வர் பங்கேற்கற விழாவுக்கு முந்தைய நாள், பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் நடத்துவா... அதுல போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்துப்பா ஓய்...
''செய்தித் துறை சார்பா, இணை அல்லது துணை இயக்குனர்களோ, பி.ஆர்.ஓ.,க் களோ தான் கலந்துக்கணும்... ஆனா, அவா கலந்துக்காம ஏ.பி.ஆர். ஓ.,க்களை அனுப்பிச்சுடறா ஓய்...
''அவாளை போலீஸ் அதிகாரிகள் மதிக்கறதே இல்ல... பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கறது சம்பந்தமா, ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் ஏதாவது சொல்ல முற்பட்டா, அவாளை பேச விட்டாத்தானே... இதனால, முதல்வர் விழாவுல நிறைய குளறுபடிகள் நடக்கறது ஓய்...
''சமீபத்துல நடந்த சில விழாக்கள்ல, பத்திரிகையாளர்களுக்கு பின் சீட்களை ஒதுக்கிட்டா... இதனால, செய்தி சேகரிக்க முடியாம அவா சிரமப்பட்டா... இனியாவது, இந்த மாதிரி கூட்டங்கள்ல சீனியர் அதிகாரிகள் கலந்துண்டா நன்னா இருக்கும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அனுமதி பெறாம கொடிக் கம்பங்கள் வச்சது, மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிறந்த நாள் சமீபத்துல வந்துச்சே... அன்னைக்கு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., சார்புல, ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை - ஒயிட்ஸ் ரோடு சந்திப்புல, 55 அடி உயரத்துக்கு தி.மு.க., கொடிக் கம்பத்தை நட்டு, கொடியேத்தினாங்க...
''இதேபோல, சூளைமேடு பகுதியில இருக்கிற நெல்சன் மாணிக்கம் சாலையிலும், 45 அடி உயர கொடிக் கம்பத்தை வச்சிருக்காங்க... இதுக்கெல்லாம், மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் வாங்கலைங்க...
''இந்த கொடிக் கம்பங்கள் சாய்ந்தாலோ, வாகன ஓட்டிகள் மோதிட்டாலோ, பெரிய அளவுல விபத்துக்கள் நடந்துடும்னு அந்த பகுதி மக்கள் பயப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''போன, 2019 செப்டம்பர், 12ம் தேதி, சென்னையில பிளக்ஸ் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்து போனதை, எல்லாரும் மறந்துட்டா போல ஓய்...'' என்ற படியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.