டிசம்பர் 7, 2016
சென்னை மயிலாப்பூரில், ஸ்ரீனிவாசன் அய்யர் - ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக, 1934 அக்டோபர், 5ல் பிறந்தவர் ராமசாமி. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும், பல நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
தன், 20வது வயதில், 'கல்யாணி' என்ற நாடகத்தில் அறிமுகமாகி, 'தேன்மொழியாள்' நாடகத்தில், 'சோ' கதாபாத்திரம் ஏற்றதால், சோ ராமசாமியானார். பின், 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' என்ற நாடக கம்பெனியை நடத்தினார். இவரின், 'முகமது பின் துக்ளக், சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள், ஆயிரம் முறைக்கு மேல் அரங்கேறின. பார் மகளே பார் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
பல படங்களை எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர். ராஜ்யசபா நியமன எம்.பி., யாகவும் இருந்தார். தன், 'துக்ளக்' பத்திரிகையில் அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வதில் வல்லவர். பத்திரிகையாளர் மற்றும் நடிகர் என்ற வகையில், பல விருதுகளைப் பெற்ற இவர், 2016ல், இதே நாளில், தன் 82வது வயதில் மறைந்தார். 'துக்ளக்' பத்திரிகையின் நிறுவனர் மறைந்த தினம் இன்று!