'ஈவ்டீசிங்' பிரச்னையை சட்டத்தின் உதவியோடு, பெண்கள் எப்படி கையாளலாம் என்பது குறித்து கூறும் வழக்கறிஞர் திருமகள்: பெண்கள், சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள ஆண் அதிகாரியிடம் தங்கள் பிரச்னையை சொல்வதற்கு தயங்குவர்.
இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கவே, தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
இங்கு, ரைட்டர் முதல் ஆய்வாளர்கள் வரை அனைவருமே பெண்கள் தான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் அணுகலாம்.
இன்றைய தேதியில் சைபர் கிரைம் குற்றங்களில் கூட, சம்பந்தப்பட்ட பெண்கள் பற்றிய விபரமும், அடையாளமும் வெளியே தெரியாத வகையில், பாதுகாத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை துணிச்சலுடன் அணுகுவது, மிகவும் அவசியமானது.
ஏனெனில், சட்டங்கள் ஏராளமாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டால் தான், சமுதாயத்தில் குற்றங்கள் குறையும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவளது குடும்பத்தின் ஆதரவுகிடைப்பதில்லை. 'இந்த சொசைட்டி என்ன பேசுமோ, மத்தவங்க என்ன நினைப்பாங்களோ...' என்று மட்டும் தான், அந்த பெண்ணின் குடும்பம் நினைக்கிறது.
'உன் மீது எந்த தப்பும் இல்லை; தப்பு செய்த அந்த ஆண் தான் சரியாக வளர்க்கப்படவில்லை' என்று, அந்த பெண்ணுக்கு எடுத்துச் சொல்லி, தவறான எந்த முடிவையும் அவள் எடுக்காதபடி தைரியம் கொடுப்பது,பெற்றோரது கடமை.
ஒரு பிரச்னை என்று வருகையில், தங்கள் பெண்ணுக்கு பெற்றோர் தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.
பிரச்னை என்று வரும் போது, காவல் நிலையத்திற்கு, அந்தக்குடும்பம் தைரியமாக சென்று புகார் அளிக்கும் போது, தவறிழைத்த அந்த ஆணுக்கும், சரியான பாடமாக அமையும்; தவறுகள் நடப்பதும் அரிதாகும்.
ஒரு பெண்ணை தவறான முறையில் ஒரு ஆண் புகைப்படம் எடுத்து, 'பிளாக்மெயில்' செய்கிறான் என்றால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தைரியமாக செயல்படுவது அவசியம்.
'குற்றம் செய்யும் ஆணுக்கே இவ்வளவுதைரியமிருந்தால், ஒரு தவறும் செய்யாத நாம் எதற்கு வீணாக மன உளைச்சல் அடைந்து, தவறான முடிவுகளை எடுக்க வேண்டும்?' என ஒவ்வொரு பெண்ணும் நினைக்க ஆரம்பித்தால், சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படும்; குற்றங்களும் வெகுவாக குறையும்!