பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை எதிரொலியாக சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
மதுரையில் இருந்து பாயும் வைகை ஆற்றில் பரமக்குடி பகுதிகளில் ஓரளவிற்கு மணல் உள்ளது. இந்நிலையில் பார்த்திபனூர் மதகு அணை முதல் நயினார்கோவில் எல்லை வரை ஆற்றில் ஆங்காங்கே மணல் கொள்ளை நடக்கிறது.
டிச.3ல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர்லாரிகளில் மணல் கொள்ளை நடந்தது. இது குறித்து தினமலர் செய்தி எதிரொலியாக பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பின.
பா.ஜ., மறத் தமிழர் சேனை, மார்கசிஸ்ட், தாய் தமிழர், அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் பா.ஜ., வினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில், தொடர்ந்து அனைத்து கட்சிகளும் முற்றுகை போராட்டத்தில்ஈடுபட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, நேற்று காலை பரமக்குடி சப்-கலெக்டர் அப்துல் ரசூல் தலைமையில், தாசில்தார் பார்த்தசாரதி, உதவி செயற்பொறியாளர் (கனிமம்) ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், துணை தாசில்தார் அமர்நாத், இன்ஸ்பெக்டர்சாமுவேல் ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆற்றில் பார்வையிட்டனர்.
காலை 7:00 மணி முதல் சூடியூர், கீழப்பெருங்கரை, தெளிச்சாத்த நல்லூர், முத்தையா கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட படித்துறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தடுப்பு வேலிகள் அமைத்து, வைகை ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.