வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினுடன் சென்ற தி.மு.க., மூத்த எம்.பி, ஒருவரிடம், 'காங்கிரசை கழற்றிவிடும் முடிவு என்னாச்சு?' என்று, பா.ஜ., மேலிட தலைவர் கேட்க, 'இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை' என்று கூறி, அவர் சமாளித்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில், 'ஜி - 20' கூட்டமைப்பின் மாநாடு தொடர்பாக, மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் டில்லியில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனாலும், டில்லி பயணம் அவருக்கு உற்சாகம் தரவில்லை; அங்கு நடந்த சில சம்பவங்கள், அவரை அதிருப்தி அடைய வைத்துள்ளன.
தாமதம்

டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கும் பணிகளை, தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் இருவர் ஏற்பாடு செய்தனர். டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை செலுத்தினர்.ஆனால், முதல்வர் ஸ்டாலின் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில், பா.ஜ., - எம்.பி., ஒருவரின் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால், ஸ்டாலின் வாகனத்தை எடுப்பதில், தாமதம் ஏற்பட்டது.
மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பா.ஜ., முதல்வர்கள் சிலர், வேண்டுமென்ற அவரது பேச்சை கூர்ந்து கவனிக்காமல், தமிழ் தெரியாதது போல, அலட்சியமாக இருந்து உள்ளனர். ஸ்டாலின் இருக்கை முன் அவரது பெயர், பொறுப்பு மற்றும் கட்சி ஆகியவை, ஹிந்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தன .இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் பலரும், 'இதற்கு எல்லாம் போராட்டம் உண்டா?' என, கேள்வி எழுப்பி வருகின்றனர். இது போன்ற சில சம்பவங்கள், முதல்வர் ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
வலியுறுத்தல்
இது ஒருபுறம் இருக்க, முதல்வர் ஸ்டாலினுடன் டில்லிக்கு சென்ற மூத்த எம்.பி., யான முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரிடம், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றிவிடும் முடிவு என்னாச்சு?' என, பா.ஜ., டில்லி மேலிட தலைவர் ஒருவர் கேட்டுள்ளார். உடனே, அந்த எம்.பி., 'இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை' எனக் கூறி சமாளித்தார். இருப்பினும், பா.ஜ., டில்லி மேலிட தலைவர், 'விரைவில் முடிவு எடுங்கள்' எனக்கூறி, சிரித்தபடியே கிளம்பினார்.
லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றி விட வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும், தி.மு.க.,வுக்கு பா.ஜ., மேலிடம் வலியுறுத்தி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகள் பாதிக்கப்படும் என்பதால், காங்கிரசை கழற்றி விடும் முடிவை எடுக்க முடியாமல், தி.மு.க., குழப்பத்தில் உள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -