குமாரச்சேரி, கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது குமாரச்சேரி ஊராட்சி. இங்கிருந்து இருளஞ்சேரி வழியாக, நரசிங்கபுரம் செல்லும் ஒன்றிய சாலையில், குப்பை நிறைந்து காணப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், நரசிங்கபுரம் கோவிலுக்கு இவ்வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்த வழியே வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோர் துர்நாற்றத்தால் சிரமப்படுவதோடு தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், சாலையோரம் புதர் மண்டிக் கிடப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சாலையோரம் உள்ள குப்பையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.