திருவனந்தபுரம், வெளிநாட்டு சுற்றுலா பயணியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இருவருக்கு, ஆயுள் முழுக்க சிறையில் இருக்கும் தண்டனை விதித்து, திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் இருந்து 33 வயது பெண், நம் நாட்டுக்கு 2018ல் சுற்றுலா வந்திருந்தார். கேரள மாநிலம் கோவளம் கடற்கரைக்கு, அந்த ஆண்டு மார்ச் 14ல் வந்த அவரை காணவில்லை.
இதையடுத்து, அவரது சகோதரி துாதரகம் வாயிலாக புகார் செய்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏப்., 21ல், திருவல்லா என்ற இடத்தில் முற்றிலும் அழுகிய நிலையில், அந்தப் பெண் உடலை மீட்டனர்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி போலீசார், உமேஷ், உதயன் என இருவரை மே மாதம் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று குற்றவாளிகள் உமேஷ், உதயன் இருவருக்கும், ஆயுள் முழுக்க சிறையில் இருக்கும் தண்டனை மற்றும் தலா 1.6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், அபராத தொகையில் ஒரு பாதியை கொலையான பெண்ணின் சகோதரிக்கு வழங்கவும், சட்டப் பணிகள் குழு இந்த வழக்கை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.