புதுடில்லி,: நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது, உலக வங்கி.கடந்த அக்டோபரில், உலக வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என, அதற்கு முன் கணித்திருந்த 7.5 சதவீதத்திலிருந்து குறைத்து அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 6.5 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார பாதிப்புகளிலில்இருந்து மீட்சியடைவது மற்றும் எதிர்பார்த்ததை விட இரண்டாவது காலாண்டில் அதிக வளர்ச்சி ஆகியவை காரணமாக, இந்தத் திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
![]()
|
உலக கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஒரு சர்வதேச நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி உயர்த்தி அறிவித்துள்ளது, இதுவே முதல் முறையாகும்.இது குறித்து, உலக வங்கி அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய வட்டி அதிகரிப்பு, மந்தமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை காரணமாக, 2021 - 22 நிதியாண்டின் வளர்ச்சியான 8.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022- - 23ல் குறைந்த வளர்ச்சியையே இந்தியா அடையும்.
மேலும், அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியை பெற்று 6.6 சதவீதமாக இருக்கும்.
பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும். நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும். இந்தியா ஒரு பெரிய உள்நாட்டு சந்தையைக் கொண்டிருப்பதாலும், சர்வதேச வர்த்தகம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாலும், மற்ற வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
சவால்கள் பல இருந்த போதிலும், வலுவான உள்நாட்டு தேவையின் காரணமாக, இந்தியா அதிக வளர்ச்சியைப் பதிவுசெய்து, உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'பிட்ச்' நிறுவனத்தின் கணிப்பு
'பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு ஆண்டில், வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளது.இருப்பினும், அடுத்த இரு ஆண்டுகளுக்கான கணிப்பை குறைத்துள்ளது.அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.2 சதவீதமாகவும்; அதற்கு அடுத்த நிதியாண்டில் 6.9 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதற்கு முன், அடுத்த நிதியாண்டில் 6.7 சதவீதமாகவும்; அதற்கு அடுத்த நிதியாண்டில் 7.1 சதவீதமாகவும் வளர்ச்சி இருக்கும் என கணித்து அறிவித்திருந்தது. தற்போது குறைத்துள்ளது.