கோல்கட்டா
பிரதமர் மோடியின் குஜராத் பயணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பொய் செய்தி வெளியிட்ட புகாரில், திரிணமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேயை, குஜராத் போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான சாகேத் கோகலே, சமீபத்தில் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து பதிவிட்டு இருந்தார்.
குஜராத்தின் மோர்பியில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தில், ௧௩௫ பேர் உயிர்இழந்தனர். இந்த இடத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மோடியின் இந்தப் பயணத்துக்கு ௩௦ கோடி ரூபாய் செலவானதாக, பத்திரிகை ஒன்றில் வெளியானதாக கூறப்படும் செய்தியை இணைத்து, சாகேத் கோகலே பதிவிட்டு இருந்தார்.
ஆனால், அது போலி செய்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் கோகலேவுக்கு எதிராக குஜராத் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், புதுடில்லியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம் கோகலே பயணம் செய்தார்.
அவரை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில், குஜராத் போலீசார் கைது செய்துள்ளதாக, திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் கோகலே கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓபிரையன் உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சாகேத் கோகலே கைதை, குஜராத் போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.