ஸ்ரீவில்லிபுத்துார் : செங்கோட்டையிலிருந்து மதுரை வரை 14 பெட்டிகளுடன் இயங்கிய ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டபின் 12 பெட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு தினமும் 3 தடவை பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதில் பயண நேரம், கட்டணம் குறைவு. வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் மிக அதிகமாக மக்கள் பயணிப்பர்.
பயணிகள் வசதிக்காக என செங்கோட்டையிலிருந்து தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு மதுரை சென்றடையும் ரயிலை மயிலாடுதுறையை மாலை 4:00 மணிக்கு சென்றடையும் வகையில் நீட்டித்து ரயில்வே அறிவித்தது. அக். 24 முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
ஆனால் மதுரை - செங்கோட்டை வரை 14 பெட்டியுடன் இயக்கப்பட்ட இந்த ரயில் மயிலாடுதுறைக்கு நீட்டிப்புக்குப்பின் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக 5 பெட்டிகள் குறைக்கப்பட்டு 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளின் அதிருப்தி, எதிர்ப்பு, கூட்டம் அதிகரிப்பையடுத்து கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு 10 பொது பெட்டிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் லக்கேஜ் பெட்டிகள் 2 என 12 பெட்டிகளுடன் தற்போது சென்று வருகிறது.
கூட்டம் அதிகம்
பயண துாரத்தை அதிகரிக்கும்போது பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு பதிலாக குறைத்துள்ளது தெற்கு ரயில்வே.
ஒரு பெட்டியில் 90 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். தற்போது 110 பேர் வரை உட்கார்ந்தும், 100 பேர் வரை நின்று கொண்டு பயணிக்கின்றனர்.
காலை மயிலாடுதுறை செல்லும்போது ராஜபாளையத்தில் இருந்து கூட்டம் படிப்படியாக அதிகரிக்கிறது. விருதுநகரில் பயணிகள் பெட்டிக்குள் ஏறக்கூட முடியாத நிலை உள்ளது.
இதேபோல் மறு மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:00 மணிக்கு மதுரை வரும்போது, தென் மாவட்ட பயணிகள் முண்டியடித்து இடம் பிடிக்க வேண்டியுள்ளது.
பல மாவட்டங்கள், ஆன்மிக தலங்களை கடந்து செல்வதால் இந்த ரயில் நிரம்பி வழிகிறது. தற்போதுள்ள கூட்டத்திற்கு 20 பெட்டிகள் வரை இணைக்கலாம். தெற்கு ரயில்வே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடுதல் சேவை தேவை
செங்கோட்டையில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும் இந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டு மறுநாள் காலை 11:30க்கு தான் புறப்படுகிறது.
இதை மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 2:00 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும் வகையிலும் இரவு 9:00 மணிக்கு செங்கோட்டை வரும் ரயிலை மீண்டும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும் வகையிலும் இயக்கினால் பெரிதும் வரவேற்பு கிடைக்கும்.
தேவை கூடுதல் ஸ்டாப்பிங்
சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, திருச்சி, தஞ்சை நகரங்களுடன் வியாபாரம், திருமண சம்பந்தம் போன்ற தொடர்புடையவர்கள். எனவே சோழவந்தானிலும் பக்தர்கள் வசதிக்காக சுவாமிமலையிலும் இந்த நின்று செல்ல வேண்டும்.