திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்காத கமிஷனர் உள்ளிட்டோர் மீது நெல்லை கோர்ட்டில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இம்மாநகராட்சி பகுதியில் கழிவுநீர், திடக்கழிவை அகற்ற பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. அம்ருத் திட்டம், மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் ரூ .315 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் தாமிரபரணி ஆறு நெல்லை மாநகர பகுதியில் துவங்கும் சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, உடையார்பட்டி உட்பட 16 இடங்களில் மாநகராட்சியின் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. பொதுமக்கள் குளிக்கும், பயன்படுத்தும் இடங்களிலும் இப்பிரச்னை உள்ளது.
கோர்ட்டில் வழக்கு
எனவே பாதாள சாக்கடை திட்டத்தின் படி கழிவுநீரை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி கமிஷனர் மீது குற்றவியல் நடவடிக்கைகோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் நேற்று திருநெல்வேலி 4வது ஜெ.எம்.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆற்றோரத்தில் டிவாட்ஸ் எனப்படும் சுத்திகரிப்பு தொட்டிகள் கட்டி கழிவுநீர் சுத்தம் செய்து அதன்பின் ஆற்றில் வெளியேற்றுவது குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மாநகராட்சி அனுமதி பெறவில்லை. தாமிரபரணி ஆறு விவசாயத்திற்கு மட்டுமின்றி விருதுநகர், ராமநாதபுரம் உட்பட 5 மாவட்ட மக்களின் அடிப்படை குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. எனவே நேரடியாக சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்திட உத்தரவிட கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என முத்துராமன் தெரிவித்தார்.