அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில், மாணவர் கொண்டு வந்த, 'ஏர்கன்' பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் நிர்மல்பிரபு, 26; சென்னை செல்வதற்காக நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார்.
அவரது உடைமைகளை சோதித்த போது, ஏர்கன் இருந்ததால், அதை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் அவனியாபுரம் போலீசார் விசாரித்தனர். பயண அவசரத்தில் தவறுதலாக எடுத்து வந்ததாக நிர்மல் பிரபு கூறினார்.
'எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும்' என, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, வேறு விமானத்தில் அவரை சென்னைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது:
கல்லுாரி ஒன்றில் எம்.சி.ஏ., படிக்கும் நிர்மல்பிரபு, நண்பர் திருமணத்திற்காக காரில் பழநி வந்தார். திருமணம் முடிந்ததும் விமானத்தில் செல்ல மதுரைக்கு வந்தபோது தான், ஏர்கன்னை தவறுதலாக எடுத்து வந்தது அவருக்கு தெரிந்தது.
இவ்வாறு கூறினர்.