பழநி : பழநி மலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழாவை ெயாட்டி பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மஹாதீபம் ஏற்றப்பட்டது
இக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ.30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்றுமுன்தினம் சாயரட்சை பூஜைக்கு பின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கார்த்திகை தினமான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:30 மணிக்கு விளா பூஜை நடந்தது.
மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. 4:45 மணிக்கு சின்னகுமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது மாலை 6:00 மணிக்கு பிரகாரங்களில் தீபம் ஏற்ற, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீப ஸ்தம்பத்தில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயிலில் மஹா தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
இணை ஆணையர் நடராஜன், அதிகாரிகள் பங்கேற்றனர்.