தேவகோட்டை : மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் செய்ததால், உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கொடுங்காவயலைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் ஜெயபிரபு, 36; லாரி டிரைவர். இவருக்கும், தீபா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; ஏழு வயதில் மகன் உள்ளார். தீபா ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
இருவரும் காரைக்குடி பாண்டியன் நகரில் வசித்தனர். நவ., 21ல் ஜெயபிரபு திடீரென இறந்து விட்டார். கணவர் மாரடைப்பால் இறந்ததாக மனைவி தீபா தன் கணவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, ஜெயபிரபு உடல், சொந்த ஊரான கொடுங்காவயலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயபிரபுவின் தந்தை ஆசிர்வாதம் தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, காரைக்குடி ஏ.எஸ்.பி.,யிடம் புகார் செய்தார்.
இதையடுத்து, ஜெயபிரபு உடலை தாசில்தார் செல்வராணி, போலீசார் முன்னிலையில் நேற்று தோண்டி எடுத்தனர். சிவகங்கை மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.
தந்தை ஆசிர்வாதம் கூறுகையில், ''மகனின் கழுத்தில் கோடு இருந்தது; துாக்கிட்டு இறந்தது போல இருந்தது. என் பேரனும், மகன் துாக்கு போட்டதை கூறினார். எனவே சந்தேகம் வந்தது. போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.