விஷக்கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டும் கேரளாவை கண்டித்து, எந்த ஒரு போராட்டமும் நடத்தாத தமிழக மார்க்சிஸ்ட் கட்சி, 'தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா' என, தம்பட்டம் அடிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உற்பத்தியாகும் பல்வேறு வகை கழிவுகள், அம்மாநில அரசு அதிகாரிகளின் துணையுடன் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எல்லையோர மாவட்டங்களில் அவை ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. கிராம மக்கள், போலீசார் கண்காணிப்பு எந்த வழித்தடங்களில் குறைந்துள்ளதோ, அந்த வழித்தடங்களில் இத்தகைய கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.
பெரும் அதிர்ச்சி
கோவை மாவட்ட எல்லையோர வழித்தடங்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சமீப காலமாக, இந்த குப்பை கழிவுகள் தென்காசி மாவட்டத்தில் கொட்டப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இப்படி அண்டை மாநிலத்தில் விஷக்கழிவுகளை கொட்டும் கேரளாவை கண்டித்து, இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒருபோதும் போராட்டம் நடத்தியதில்லை.
மாறாக, கேரளா அரசு, கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுப்பத்திரம் வாசிக்கின்றனர். அதுவும், தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின், 'டுவிட்டர்' வலை தளக் கணக்கில் இரு தினங்களுக்கு முன் வெளியான அந்த பதிவு, அரசியல் கட்சியினர், அதிகாரிகள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
ஒரே மாநிலமாம்!
'துாய்மையில் கேரளா முதலிடம்; தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா. கழிவு மேலாண்மைத்துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்று பசுமைத்தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது' என, அந்த பதிவில் தமிழக மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
'மற்ற மாநிலங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றும் அந்த பதிவில் பெருமையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது' என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மார்க்சிஸ்ட் கட்சி இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
விஷக்கழிவுகளை கேரளா என்ன செய்கிறது; எப்படி அழிக்கிறது என்பது பற்றி எந்த புரிதலும் இல்லாதது போலவும், தெரிந்தே முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவும், மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த பதிவு அமைந்துள்ளது.
![]()
|
கண்டிப்பு
மார்க்சிஸ்ட் கட்சியினரின் அந்த டுவிட்டர் பதிவில், 'கமென்ட்' செய்திருக்கும் பலரும், தமிழகத்தில் கழிவுகளை கொட்டும் கேரளாவின் செயலை கண்டித்துள்ளனர். விஷக்கழிவுகளை அண்டை மாநிலங்களில் கொட்டும் கேரளாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திஉள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பதிவில் வந்திருக்கும் சில கமென்ட்கள்: எல்லா கழிவுகளையும் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டினால் எப்படி அபராதம் போடுவர். அதற்காக தமிழகத்தில் நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா; மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக உங்க கட்சி என்ன செய்தது என சொல்லுங்கள் கேரளாவில் உருவாகும் குப்பையை எப்படி மேலாண்மை செய்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவதற்கு பெயர் என்ன கழிவு மேலாண்மை. நியாயமாக கேரளாவுக்கு தான் அபராதம் விதிக்க வேண்டும். கூச்சமே இல்லாமல் இப்படி முட்டுக் கொடுக்கிறீர்களே! கேரளா கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதை எதிர்த்து குரல் கொடுங்கள்; போராட்டம் நடத்துங்கள்; அதை நிறுத்த ஏதாவது முயற்சி எடுங்கள்; அப்புறம் பெருமையடித்துக் கொள்ளலாம் தமிழகத்தை குப்பை மேடாக்குபவர்களுக்கு துாய்மை ஒரு கேடு
கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறியதாவது:கேரளாவில் இருந்து கழிவுகளை கோவை மாவட்டத்துக்குள் கொண்டு வந்து கொட்டும் சம்பவங்கள் சமீபகாலமாக நடக்கவில்லை. இதற்கு போலீசார் மேற்கொண்டுள்ள தீவிர கண்காணிப்பு முக்கிய காரணம். தமிழகம் - கேரளா எல்லையில் அமைந்திருக்கும், 11 செக்போஸ்ட்களை கடந்து செல்லும் வாகனங்களை, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கின்றனர்.எல்லையோர கிராம மக்களும் தகவல் தெரிந்தால் உடனுக்குடன் வாகனங்களை பிடித்து விடுகின்றனர். இதன் காரணமாக, கழிவுகளை கொண்டு வருவது கட்டுக்குள் வந்திருக்கிறது. எனினும் உஷாராக இருக்கும்படி எல்லையோர ஸ்டேஷன் போலீசார் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, எஸ்.பி., கூறினார்.
தமிழகம் - கேரளா எல்லையில் அமைந்துள்ள கோபாலபுரம், வீரப்பகவுண்டனுார், நடுப்புணி, மீனாட்சிபுரம், செம்மணாம்பதி, கோவிந்தாபுரம் வழியாக கழிவு ஏற்றிய லாரிகள் கோவை மாவட்டத்துக்குள் வருகின்றன. இப்படி வரும் லாரிகளை அந்தந்த கிராம இளைஞர்களே கண்காணித்து பிடிக்கின்றனர். பிடிபடும் லாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவதில்லை; அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. உடனடியாக அந்த லாரியை, கேரளா செக்போஸ்ட் வரை கொண்டு சென்று விட்டு வரும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்ட கொண்டு வந்து பிடிபட்ட கழிவுகள் விபரம்: 2017 செப்., 1ம் தேதி: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் கழிவுகளுடன் மூன்று சரக்கு வாகனங்களை கிராம மக்கள் பிடித்தனர். கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகளை, பணம் வாங்கிக்கொண்டு கொட்ட அனுமதித்த அருள்பிரகாஷ் கைது செய்யப்பட்டார் 2018 ஜூன் 23ம் தேதி: நீலகிரி மாவட்டம், நாடுகாணி அருகே மருத்துவக் கழிவு ஏற்றி வந்த இரு லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். விசாரணையில், கேரளா, பெருந்தல் மண்ணாவில் இருந்து மருத்துவக் கழிவு ஏற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இரண்டு லாரிகளும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன 2019 ஜன., 27ம் தேதி: ஆனைமலை, லக்கம்பாளையம் அருகே கேரளா, திருச்சூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரி பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. லாரிக்கு அபராதம் விதித்து, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது 2020 ஜூலை 30: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் ஜேடர்பாளையம் பிரதான சாலையில் மருத்துவக்கழிவு கொட்டிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா, ஆலப்புழாவில் இருந்து கழிவு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இருவர் கைது செய்யப்பட்டனர் 2021 ஏப்., 21ம் தேதி: பொள்ளாச்சி, செம்மணாம்பதி அருகே இரட்டைமடை பிரிவு தோட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் சிக்கின. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது 2022 பிப்., 13ம் தேதி: பொள்ளாச்சி, புளியம்பட்டி அருகே கேரள கழிவுகளுடன் லாரி சிறைபிடிக்கப்பட்டது. எர்ணாகுளத்தில் இருந்து மருத்துவக் கழிவு ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது. லாரிக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. லாரி மீண்டும் கழிவுடன் கேரளா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது 2022 அக்., 11ம் தேதி: பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டிக்கு உட்பட்ட பெரியாக்கவுண்டனுாரில் மீன் கழிவு கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கேரளா, பட்டாம்பியில் இருந்து துாத்துக்குடிக்கு மீன் ஏற்றிச்சென்ற அந்த லாரிக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- நமது நிருபர் -