சின்னாளபட்டி : திண்டுக்கல்மாவட்டம் சின்னாளபட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் விழாவில் இளைஞர்கள் மார்பில் 'கத்தி போட்டு' நேர்த்திகடன் செய்தனர்.
சின்னாளபட்டி நடூரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதை தொடர்ந்து அம்மனை பிருந்தாவன தோப்பில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் கமிட்டி சார்பில் ஜமீன்தார் துரை பாண்டியன் மாக்காள நாயகருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
அவர் வழங்கிய குதிரையை பிருந்தாவன தோப்பிற்கு மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். அப்போது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தியில் பூ சுற்றி அதில் காதோலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
குதிரை வாகனத்தில் கோயில் நோக்கி கரக ஊர்வலம் நடக்க காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், 'சவுடம்மா தீசுக்கோ' என்ற கோஷத்துடன் நேர்த்திக்கடனுக்காக மார்பில் கத்தி போட்டு வந்து வழிபட்டனர். இதன் பின் சக்தி நீர் அழைப்பு நடக்க அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை ,திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.