மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நுாத்துலாபுரத்தைச் சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலராக உள்ளேன். ஒன்றிய தலைவர் எனக்கு ஒரு, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
அதில், 'நுாத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதை இடித்து அப்புறப்படுத்த, 79 ஆயிரம் ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளத்துப்பட்டியில் ஆய்வு செய்தேன்; மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எதுவும் இல்லை. தீர்மானத்தை கைவிட வேண்டும் என, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கமிஷனர், தலைவரிடம் தெரிவித்தேன்; திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தேன்.
இது, மக்கள் பணத்தை தவறாக கையாள மேற்கொண்ட கண்துடைப்பு நாடகமே. இந்க அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தண்ணீர் தொட்டியை இடிக்கும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. திண்டுக்கல் கலெக்டர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், நிலக்கோட்டை ஒன்றிய கமிஷனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.