மதுரை: மதுரை மத்திய சிறையில், 100 கோடி ரூபாய் ஊழல் புகார் உறுதி செய்யப்படாத நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 12 அலுவலர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து, துறை டி.ஜி.பி., அமரேஷ்பூஜாரி உத்தரவிட்டார்.
மதுரை மத்திய சிறையில், 1,850 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு பேக்கரி, மருத்துவ பேண்டேஜ் உட்பட பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதனால், கைதிகளுக்கு வருமானமும், சிறை நிர்வாகத்திற்கு வருவாயும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், வெளிச்சந்தையில் பொருட்களை விற்றதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கிளம்பியது. தணிக்கை ஆய்வும் நடந்தது. ஊழல் நடந்ததாக இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், ஊழல் புகார்களுக்குள்ளான அலுவலர்கள், தொடர்ந்து மதுரையிலேயே பணிபுரிவதாக சர்ச்சை எழுந்தது.
சமீபத்தில் மதுரை சிறையில் நேரில் ஆய்வு செய்த டி.ஜி.பி., அமரேஷ்பூஜாரி, இது குறித்து விசாரித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று, 12 அலுவலர்களை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதன்படி, மதுரை சிறை அலுவலக கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மேலாளர் சித்திரவேல் புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பேக்கிங் பிரிவு கிளார்க் கதிரவன் புதுக்கோட்டைக்கும், உதவியாளர் முத்துலட்சுமி சேலத்திற்கும் இடமாற்றப்பட்டனர்.
இவர்கள் உட்பட மொத்தம், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.