தஞ்சாவூர்: அம்பேத்கர் காவி உடை, திருநீறு பட்டை அணிந்து இருப்பது போல, கும்பகோணத்தில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர், 'போஸ்டர்' ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன், அம்பேத்கர் சிலை உள்ளது. அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டார் பலரும், நேற்று அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போராட்டம்
ஹிந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் குருமூர்த்தி பெயரில், நேற்று முன்தினம் இரவு, அம்பேத்கர் காவி உடை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல படம் அச்சிட்ட போஸ்டர் நகர பகுதி முழுதும் ஒட்டப்பட்டு இருந்தது.
இதையறிந்த வி.சி., கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, போலீசில் தெரிவித்தனர். உடனடியாக, சாதாரண உடையில் சென்ற போலீசார் போஸ்டரை அகற்றினர்.
![]()
|
நடவடிக்கை
இருப்பினும், வி.சி., உள்ளிட்ட அமைப்பினர், கும்பகோணம் டி.எஸ்.பி., அலுவலகம் முன் திரண்டு, போஸ்டர் ஒட்டிய குருமூர்த்தியை கைது செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய டி.எஸ்.பி., அசோகன், குருமூர்த்தியை கைது செய்து நடவடிக்கை எடுத்தார்.
போராட்டம் கைவிடப்பட்டது. ஹிந்து மத அடையாளங்களுடன் அம்பேத்கர் படம் அச்சிட்ட போஸ்டரால் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.