பெரியகுளம் : பெரியகுளம் கைலாசபட்டி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் தி.மு.க.,வினருக்கும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், அர்ச்சகர் சாமிநாதன் தீபம் ஏற்றினார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன் பன்னீர்செல்வம் சொந்தச் செலவில் கோயிலை புதுப்பித்தார். கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபம் உட்பட தினமும் நடக்கும் பூஜைக்கு அன்பர் பணிக்குழு துவங்கப்பட்டது. இதற்கு பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தலைவராகவும், நிர்வாகிகளும் உள்ளனர்.
கார்த்திகை தீபம்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தை பன்னீர்செல்வம், அன்பர் பணிக்குழு தலைவர் ஜெயபிரதீப், தேனி ஆவின் தலைவர் ராஜா ஏற்றுவது வழக்கம். இந்த முறை பெரியகுளம் எம்.எல்.ஏ., ஏற்ற வேண்டும் என தி.மு.க.,வினர் தயாராகினர்.
சரவணக்குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், தி.மு.க., வினர் வந்திருந்தனர். இதனால் யார் தீபம் ஏற்றுவது என்பதில் சலசலப்பு ஏற்பட்டது.
ஜெயபிரதீப் கூறுகையில், 'இந்த சம்பவத்திற்கு கடவுளும், மக்களும் தான் சாட்சி. இக்கோயில் அரசியல், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. வழக்கமான முறையில் ஏற்றப்பட வேண்டும், என்றார்.
இதனை தொடர்ந்து ஜெயபிரதீப் கொடுத்த தீபத்தை அர்ச்சகர் சாமிநாதன் ஏற்றினார்.
இது குறித்து கலெக்டர் முரளீதரனிடம் தங்கதமிழ்செல்வன் புகார் அளித்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கைலாசநாதர் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது.
அதில் பன்னீர்செல்வம் மகன், உறவினர்களுக்கு பரிவட்டம் கட்டுகின்றனர். தீபம் ஏற்ற அனுமதிக்காததால் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம், என்றார்.
நேற்று இரவு பன்னீர்செல்வம் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார்.