சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, 256 கோடி ரூபாய் செலவில், 2023 ஜனவரி முதல் இரும்பு சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் பெரும்பாலான மக்கள், போதிய அளவுக்கு இரும்பு சத்து இல்லாமல் இருப்பதை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இதனால், அவர்கள் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.
தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவு சத்து, புரத சத்துக்கள் உள்ளன.
எனவே, நாடு முழுதும் உள்ள மக்களுக்கு இரும்பு சத்து கிடைக்க, ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி என்பது ஆலைகளில் நெல்லை, அரிசியாக மாற்றும் போது, 1 கிலோ அரிசி மாவாக அரைக்கப்படும். அதில் இரும்பு சத்து, 'போலிக் அமிலம், வைட்டமின் பி 12' ஆகிய சத்துக்கள் கலந்த கலவை சேர்க்கப்படும்.
அந்த கலவை அரிசி வடிவில் மாற்றம் செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். இதையடுத்து, 100 கிலோ சாதாரண அரிசிக்கு, 1 கிலோ என்ற வீதத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும்.
தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம், முதல் கட்டமாக, 2020 அக்டோபரில், திருச்சியில் துவக்கப்பட்டது. இம்மாதம், 1ம் தேதி முதல் விருதுநகர், ராமநாதபுரத்திலும், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அதே பிரிவு கார்டுதாரர்களுக்கு, 2023 ஜனவரி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படவுள்ளது.
இதற்காக, 256 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 31 லட்சம் கிலோ ஊட்டச்சத்து கலவை தயாரிக்கப்பட்டு, ரேஷன் அரிசியுடன் கலந்து தரும் பணியை, அரிசி ஆலைகள் வாயிலாக நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்ள உள்ளது.