திருப்போரூர்: ''பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, இன்றைய இளைஞர்கள் சாத்தியமாக்கி உள்ளனர். வேளாண் துறையில் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் உள்ள, அக்னி தொழில்நுட்ப கல்லுாரியில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில், 'ட்ரோன்' திறன் மற்றும் பயிற்சி மாநாடு நேற்று நடந்தது.
மாநாட்டை, மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார். கல்லுாரியில் அமைக்கப்பட்டு உள்ள, ட்ரோன் உற்பத்தி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவில், அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது: நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் உள்ளது.
![]()
|
தற்போது, இளைஞர்கள் அவற்றை சாத்தியப் படுத்தி வருகின்றனர்.வேளாண் துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை எடுத்துச் செல்ல, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'ட்ரோன்' வாயிலாக, அதிவேகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டு பிடிப்புகள் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ட்ரோன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 75 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும், ட்ரோன் சேவை வழங்கும் தொழில்முனைவோருக்கு, 10 கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன்களையும், அமைச்சர் வழங்கினார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ், அக்னி தொழில்நுட்பக் கல்லுாரியின் தலைவர் ஜெய பிரகாஷ், கருடா ஏரோஸ்பேஸ் முதன்மை கல்வி அலுவலர் ரித்திகா, பா.ஜ., மாநில செயலர் வினோஜ் பி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.