சென்னை : புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய தயார் நிலையில் இருக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம் சார்பில், இந்தாண்டு அக்டோபர் இறுதியில் துவங்கிய வட கிழக்கு பருவ மழை சீசனை எதிர்கொள்ள, ஜூலையில் இருந்து மின் சாதனங்களில் முழுவீச்சில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு சிறப்பு பராமரிப்பு பணி எனவும் பெயரிடப்பட்டது.
இந்த பணியின் கீழ், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றியது, மின் கம்பம் அருகில் சென்ற மரக்கிளைகளை அகற்றியது என, 14 லட்சம் பணிகள் செய்யப்பட்டன.
இதனால் நவம்பரில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் சில நாட்களுக்கு தொடர்ந்து கன மழை பெய்த நிலையிலும் மின் வினியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மிக அதிகம் பெய்த மழையால் மின் சாதனங்கள் அதிகம் சேதமடைந்தன.
அங்கேயும் விரைந்து சேதமடைந்த சாதனங்கள் சீரமைக்கப்பட்டு, இரு நாட்களில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னை அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய தயார் நிலையில் இருக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக அனைவரும் தேவையான உபகரணங்களுடன் அலுவலகத்திலேயே இருக்குமாறும், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.