சென்னை : பள்ளிக் கல்வியின், 'எமிஸ்' டிஜிட்டல் பதிவில் இல்லாத மாணவர்களுக்கு, இலவசங்கள் வழங்கப்படாது என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அனைத்து வகை விபரங்களும், 'எமிஸ்' என்ற டிஜிட்டல் தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த விபரங்கள், பல்வேறு துறைகளுக்கும் பகிரப்பட்டு, அத்துறைகளின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கல்வி உதவித்தொகை
மேலும், இந்த தரவுகள் அடிப்படையிலேயே, மாணவர்களுக்கான செலவுகள், கல்வி உதவித்தொகை, ஆசிரியர், பணியாளர் நியமனம் உள்ளிட்ட பணிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், எமிஸ் தளத்தில் பெயர் விபரங்கள் இணைக்கப்படாத மாணவர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள், எமிஸ் என்ற கல்வி தகவல் மேலாண்மை தளத்தில் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இலவச நலத்திட்டங்கள்
இந்த எண்ணிக்கையின்படியே, 2023- - 24ம் கல்வி ஆண்டுக்கு, அனைத்து வகை இலவச நலத்திட்டங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
எனவே, முதன்மை கல்வி அலுவலர்கள், இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, மாணவர்களின் தரவுகளை சரிபார்த்து, அதில் வேறுபாடுகள் இருந்தால், வரும் 16ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.
இனி வரும் காலங்களில், முதன்மை கல்வி அலுவலரால், எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே, இலவச நலத் திட்டங்களுக்கான தேவை பட்டியலாக எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.