சேலம்: ''தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில் வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம். அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம். அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை,'' என, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசினார்.
சேலம் மத்திய சட்டக் கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
சட்டக்கல்வி அவசியம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசியதாவது: சட்டக்கல்வி பயிலும் நீங்கள், பயப்படாமல் இருக்க வேண்டும். தடையாக இருக்கும் அனைத்தையும் உடைத்து தள்ளி, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை மிக அவசியம்.
கொலை வழக்கில் 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டால், அதில், இரண்டு ஆண்டுக்குள் 66 பேர், மாவட்ட நீதிமன்றங்களில் விடுதலையாகின்றனர். அப்பீல் வழக்குகளில், ஐந்து ஆண்டுகளுக்குள், 20 பேர் வரை விடுதலையாகின்றனர்.
இதற்கு காரணம், புலன் விசாரணை சரியாக இருப்பதில்லை. புலன் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு, சட்ட பின்புலம் இருப்பதில்லை. எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு சட்டக்கல்வி அவசியம் என்று உத்தரவிட்டால் தான் இந்நிலை மாறும். சட்டம் படித்தால் உயர் அதிகாரிகளின் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற பயத்தில், அவற்றை அமல்படுத்தவும் யாரும் தயாரில்லை.
![]()
|
நன்றிக்கடன்
ஏழைகள் நீதி கேட்டு கதவை தட்டும் இடம் போலீஸ் ஸ்டேஷன் தான். நம் சட்டம் பிரிட்டிஷாரிடமிருந்து கடன் வாங்கியது. ஆனால், லண்டனில் இன்று சாட்சிகளை சமமாக அமர வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், இங்கு சாட்சிகள் கூண்டில் நிற்க வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
சாட்சிகளை மதிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இங்கு சாட்சிகளின் அடிப்படையில் தான் நீதி வழங்கப்படுகிறது. நான் விசாரித்த வழக்குகளில், சாட்சி கூறியவர்களுக்கு, நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இங்குள்ள கோவில்களில், உற்சவ மூர்த்திகளாக இருக்க வேண்டிய, 2,500 சிலைகள், அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம், அறையில் பூட்டி வைப்பதற்கல்ல. அவற்றை மீட்டு, அந்தந்த கோவில்களில் வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில், வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம்; அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம்.
அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை. இதனால், கோவில்கள் காணாமல் போகப் போகின்றன. கோவில் மேன்மைக்காக எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தை அதிகாரிகள் தான் அனுபவிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.