சென்னை: அனல் மின் நிலையங்களில், நிலக்கரியை எரிப்பதில் இருந்து வெளியேறும் சாம்பல் விற்பனையில் நடந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டதால், மின் வாரியத்தின் வருவாய், ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
துாத்துக்குடி, திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
முன்னுரிமை
அதில் இருந்து வெளியேறும் சாம்பலில் இருந்து, 20 சதவீதம் செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மீதி சாம்பல், 1,000 கிலோவான 1 டன்னுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு, 'டெண்டர்' வாயிலாக, சிமென்ட் தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களில், ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, சாம்பல் விற்கப்பட்டது.
அந்நிறுவனங்கள், மிகக் குறைந்த விலையில் சாம்பல் வாங்கி, அதிக விலைக்கு விற்று, பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டின.
மேலும், அதிக எடைக்கு சாம்பல் வழங்கி, குறைவாக கணக்கு காட்டுவது போன்ற முறைகேடுகள் நடந்தன.
இதனால், மின் வாரியத்திற்கு மாதம், 7 கோடி ரூபாய் தான் வருவாய் கிடைத்தது.
இது தொடர்பாக, 2021ல், வாரிய உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. முறைகேட்டை தடுக்க, அதிக விலை புள்ளி வழங்கும் நிறுவனங்களுக்கு சாம்பல் விற்பது, சரியான எடை என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பல நுாறு கோடி
இதையடுத்து, சாம்பல் விற்பனை வாயிலாக கிடைத்த வருவாய் மாதத்திற்கு, 14 கோடி ரூபாயாக அதிகரித்து, ஓராண்டில் மட்டும் இரு மடங்கு உயர்ந்து, 168 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அனல் மின் நிலையங்களில் எரிபொருள், பழுது, பராமரிப்பு போன்ற பணிகளுக்காக, ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
அதில், சாம்பல் விற்பனையில் நடந்த முறைகேட்டை தடுத்ததால், ஓராண்டில் மட்டும் இரு மடங்கு வருவாய் கிடைத்துள்ளது.
மின் வாரியத்தின் அனைத்து பிரிவுகளிலும் முறைகேட்டை தடுத்தால் பல நுாறு கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம்.
சிறு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மின் வாரிய சாம்பலை பெற சிலர், போலியாக சிறு நிறுவனம் என பதிவு செய்து, சாம்பலை வாங்கி, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுகின்றன. எனவே, சிறு நிறுவனங்களின் சாம்பல் விற்பனையையும், மின் வாரியம் தீவிரமாக கண்காணித்தால், தகுதியான நபர்கள் மட்டும் பயன் பெறுவர். இதிலும் முறைகேடு தடுக்கப்படும்.