கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வரதப்பனுார் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சிவபாக்கியம் ஆனையப்பன் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., ஜமில் முன்னிலை வகித்தார்.
கால்நடை மருத்துவர் பெரியசாமி, வேளாண் துறை அலுவலர் சிவா, ஊராட்சி துணை தலைவர் ஜான்சிராணி ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் சரோஜா, பத்மாவதி பரசுராமன், ராதா, சுகுணா, ஊராட்சி செயலர் முருகேசன், மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், காலனி பகுதியில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, 6 லட்சம் மதிப்பில் தானியக்களம், 9. 57 லட்சத்தில் குளம் மேம்பாட்டிற்கு சுற்று சுவர், 5.91 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
மேலும் 2.30 லட்சத்தில் வடிகால், 5.15 லட்சத்தில் ஜெ.ஜெ., நகரில் சிமென்ட் சாலை, 2.7 லட்சம் மதிப்பில் அண்ணா நகரில் சாலை அமைத்தல் உட்பட 33 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது.