சென்னை: 'கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் அக்.,29 முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதுவரை, 36.6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை காட்டிலும்,3 சதவீதம் குறைவு.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுவடைந்து, நாளை காலை தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளை வந்தடையும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால், கன மழை மற்றும் மிக கன மழை பொழிவு ஏற்படும். இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள, 532 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
![]()
|
தேசிய மற்றும் தமிழகபேரிடர் மீட்பு படையின்,10 குழுக்கள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
சென்னையில், 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்ற, 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும், தயார் நிலையில் உள்ளன.
பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள், தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்க, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீர் இருப்பு, நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
உபரி நீர் வெளியேற்றும்போது, பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பை வழங்க, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான அவசர கால செயல்பாட்டு மையங்கள், 24 மணிநேரமும், கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.