திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், நேற்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தி பரவசத்தில், திருவண்ணாமலை நகரமே குலுங்க, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 27ல், கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றத்துடன்தொடங்கியது.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமி கருவறை எதிரில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது.
பரணி தீபம்
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதை வைத்து ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பகல், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது.
பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தனித்தனி தங்க விமானத்தில் பஞ்ச மூர்த்திகள், மாலை, 4:30 மணி முதல், 5:30 மணிவரை மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மஹா தீபத்தைக் காண, மலையை நோக்கியவாறு அமர்ந்தனர்.
ஆனந்த தாண்டவம்
பின், பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகத்தை அளித்ததை நினைவு கூரும் வகையில், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து, அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடியே, மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக் கொடிமரத்தின் முன், மலையை நோக்கியவாறு மாலை, 5:59 மணிக்கு எழுந்தருளினார்.
அதே நேரத்தில், காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள அகண்ட விளக்கில் தீபமேற்றி, அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது.
அதைக் கண்டதும், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர். அர்த்தநாரீஸ்வரர், கோவில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார்.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். இந்த ஜோதியை, 40 கி.மீ., சுற்றளவு வரை உள்ள பக்தர்கள் தரிசிக்கலாம்.