தட்சிண கன்னடா, : ரோட்டில் குடிபோதையில் நடந்து சென்றவருக்கு கத்தை, கத்தையாக பணம் கிடைத்தது. மதுபான பாரில் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தபோது, போலீசார் பறிமுதல் செய்தனர்.
தட்சிண கன்னடா, மங்களூரின் பம்ப்வெல் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜா, 47. இவர் கடந்த மாதம், 27ம் தேதி, இதே பகுதியில் குடிபோதையில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அட்டை பெட்டி ஒன்று கிடைத்தது.
அதை திறந்து பார்த்தபோது 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது.மகிழ்ச்சி அடைந்த அவர், பெட்டியுடன் மீண்டும் மதுபான கடைக்கு சென்றார். அங்கு 1,000 ரூபாய்க்கு மதுபானம் வாங்கி அருந்தினார். சக நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுத்தார். அதோடு நண்பர்களுக்கும் பணத்தை எடுத்து, தாரளமாக விநியோகித்தார்.
இது குறித்து, கங்கனாடி போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து சிவராஜாவிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
சிவராஜை நான்கு நாட்கள் வரை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து அனுப்பி உள்ளனர். இந்த விஷயம் தற்போது தாமதமாக வெளியில் தெரியவந்துள்ளது.
அந்த பெட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக கண்டெடுத்த சிவராஜா கூறுகிறார். ஆனால், போலீசாரோ 49 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கின்றனர். போலீசார் பறிமுதல் செய்ததால் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே என்ற வருதத்தில் உள்ளார் சிவராஜா.
இதற்கிடையில், 10 நாட்களாகியும், யாரும் பணத்துக்கு உரிமை கோரி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.