சென்னை : பதிவுத்துறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய, 1,000 கோப்புகள் முடங்கி உள்ளன.
தமிழக பதிவுத்துறையில், சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகை பத்திரங்கள் பதிவு செய்வது வாயிலாக, அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. பத்திரப் பதிவின்போது, ஆவண வகைப்பாடு மாற்றம் போன்ற பல்வேறு நிலைகளில் குளறுபடிகள் நடக்கின்றன.
சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் ஒவ்வொரு பத்திரமும், தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் மீது, விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
இதுபோன்று, அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு, மோசடி பத்திரங்கள் பதிவு தொடர்பான புகார்களில் சிக்கியவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அடிப்படையில், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோப்புகள், ஐ.ஜி., அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
இது குறித்து சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
துறை ரீதியான விசாரணை அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்ட, 1,000 கோப்புகள், தலைமை அலுவலகத்தில் முடங்கி உள்ளன.
இந்த கோப்புகள் நிலுவையில் இருப்பதால், இதில் தண்டிக்கப்பட வேண்டிய பலர், தொடர்ந்து பதவியில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை கோப்புகள் விரைவில் பைசல் செய்ய, ஐ.ஜி.,யிடம் முறையிடப்பட்டு உள்ளது. அவர் எப்போது முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.