பாகல்கோட். கரும்பு தோட்டத்தில் கிடந்த 5 நரிக்குட்டிகள்
பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், பெலகி தாலுகாவின் ஹெரகல்லா கிராமத்தை சேர்ந்தவர் எரப்பா வர்ணா. ராணுவ வீரரான இவர், சில நாட்களுக்கு முன், கிராமத்துக்கு வந்திருந்தார். இவருக்கு சொந்தமான கரும்பு நிலத்தில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பிறந்து இரண்டு நாட்களே ஆன ஐந்து நரிக்குட்டிகள் இருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார். குட்டிகளை தன் வீட்டுக்கு கொண்டு சென்று, பால் குடிக்க வைத்தார். ஆனால், பால் குடிக்கவில்லை.
தாய்ப்பால் குடிக்கலாம் என்ற யோசனையில், மீண்டும் கரும்பு தோட்டத்திற்கு குட்டிகளை கொண்டு சென்றார். ஆனால் தாய் நரி வரவில்லை. இது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
**
கல்வி துறையில் புரட்சி
தேசிய கல்வி கொள்கை
தார்வாட்: தார்வாட் மாவட்டம், அஞ்சுமன் பட்டதாரி மற்றும் என்.ஏ.சி., குழு இணைந்து நடத்திய புதிய தேசிய கல்வி கொள்கையின் சாதக, பாதகங்கள் தொடர்பான கருத்தரங்கை, கர்நாடக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குடாசி துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின், புதிய தேசிய கல்வி கொள்கையின் மூலம், கல்வி துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தலைமுறையினருக்கு இந்த தேசிய கல்வி கொள்கை சக்தி வாய்ந்த ஆயுதமாகும். எனவே, 21ம் நுாற்றாண்டு மாணவர்களுக்கு, புதிய விஷயங்களை கற்பித்து, அவர்களை ஆசிரியர்கள் மெருகேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
**
7_Akkada_Gadag
பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் மத்தியில் அச்சுத்துடன் வாகனத்தில் வந்த பெண். இடம்: கதக்.
தெரு நாய்கள் தொல்லை
தீர்வு காண மக்கள் கோரிக்கை
கதக்: கதக் மாவட்டம், பெடகெட்டாகியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஹமலார் காலனியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்களின் தொல்லையால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்று 5 வயது குழந்தை உட்பட 11 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளன.
குழந்தையின் கழுத்தில் நாய் கடித்ததால், 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விட பெற்றோர் அச்சப்படுகின்றனர். தெரு நாய்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
'உயிர் பலி ஏற்படுவதற்கு முன், நாய் தொந்தரவை போக்க வேண்டும்' என கேட்டு கொண்டுள்ளனர்.
**
வாகன விபத்து இழப்பீடு வழங்க
இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
ஹாவேரி: ஹாவேரி மாவட்டம், ஹனகலின் ஹிருரா கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜாகிர் இமாம்சாப். இவர், தன் காருக்கு பஜாஜ் அலின்சா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி வாங்கியிருந்தார்.
நடப்பாண்டு ஜனவரி 16ம் தேதி இவரது கார், ஹாவேரி - ஹனகல் சாலையில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த பெரிய கல்லில் மோதியது. வாகனத்தை பழுது பார்க்க, 1.92 லட்சம் ரூபாய் செலவழித்தார். இதற்கு இழப்பீடு பெறுவதற்காக, தேவையான ஆவணங்களுடன், காப்பீடு நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.
ஆனால், காப்பீடு நிறுவனம், இழப்பீடு வழங்க மறுத்ததால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய பொறுப்பு தலைவர் ஈஸ்வரப்பா, உறுப்பினர் உமாதேவி ஆகியோர், 'காரின் பழுது பார்ப்பு செலவு தொகை, அத்துடன் மனம் மற்றும் உடல் வலிக்கு 2,000 ரூபாய்; வழக்கு செலவுக்காக 2,000 ரூபாய் வழங்க வேண்டும். இதை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால், ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
**
7_Akkada_Uttara Kannada
இலை புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பாக்கு மரத்தை பார்க்கும் விவசாய ரவி ஹெக்டே. இடம்: சிர்சி, உத்தர கன்னடா.
பாக்கு மரத்தை தாக்கும்
இலை புள்ளி நோய்
உத்தர கன்னடா: உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபூர், பனவாசி, சந்தோல்லி, ஆண்டகி, சிர்சியில், 9,844 ஏக்கருக்கு பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறையின் அறிவுறுத்தல்படி, நோய் தடுப்புக்காக ரசாயன மருந்துகளை விவசாயிகள் தெளித்தனர். ஆனால், நோய் அதிகரித்து, பயிரிலேயே இலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, விவசாயி ரவி ஹெக்டே கூறியதாவது;
கடந்த மூன்று ஆண்டுகளாக, கனமழையால் காய் அழுகும் பிரச்னை அதிகரித்துள்ளது. மழைக்காலம் முடிந்த நிலையில், பருவநிலை மாற்றத்தால், இலை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோய் தடுப்பு மற்றும் மருந்து தெளித்தல் ஆகிய இரண்டுக்கும் அதிக செலவாகும்.
இந்நோயை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு சராசரியாக 20 முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளோம். ரசாயனம் தெளித்து நோயை கட்டுப்படுத்தினாலும், நோயின் தாக்கம் குறையவில்லை. அடுத்தாண்டு சாகுபடி பாதிக்கு மேல் குறையும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
**
ஒரு பைக்கில் மூவர் பயணம்
போலீசாருடன் வாக்குவாதம்
விஜயபுரா: விஜயபுரா மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகில் போக்குவரத்து போலீசார் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து, 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனால் கோபமடைந்த அவர்கள், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். வாகனத்தை, போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்ல முற்பட்டபோது, இளைஞர்கள் தடுத்தனர். வாக்குவாதம் முற்றியதால், இளைஞர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அந்த வாலிபர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, 500 ரூபாய் அபாரதம் செலுத்தி, வாகனத்தை எடுத்து சென்றனர்.
***
தார்வாட்: தார்வாட் மாவட்டம், அஞ்சுமன் பட்டதாரி மற்றும் என்.ஏ.சி., குழு இணைந்து நடத்திய புதிய தேசிய கல்வி கொள்கையின் சாதக, பாதகங்கள் தொடர்பான கருத்தரங்கை, கர்நாடக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குடாசி துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின், புதிய தேசிய கல்வி கொள்கையின் மூலம், கல்வி துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
புதிய தலைமுறையினருக்கு இந்த தேசிய கல்வி கொள்கை சக்தி வாய்ந்த ஆயுதமாகும். எனவே, 21ம் நுாற்றாண்டு மாணவர்களுக்கு, புதிய விஷயங்களை கற்பித்து, அவர்களை ஆசிரியர்கள் மெருகேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement