தஞ்சாவூர் : தஞ்சாவூரில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்; போலீசார், இரு தரப்பினரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், ஆதி தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை அலுவலகம் முன், ஏழு அடி உயரத்தில், சட்ட மேதை அம்பேத்கர் சிலை உள்ளது.
ஆதி தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய முன்னேற்ற கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் 'கருப்பு' முருகானந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் தலைமையில் பா.ஜ.,வினர், சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர்.
அங்கிருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ரவி தலைமையிலான சிலர், சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுத்து, பா.ஜ.,வினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உடனே, சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்ல மாட்டோம் எனக் கூறி, சாலை மறியலில், பா.ஜ.,வினர் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் டி.எஸ்.பி., ராஜா, இரண்டு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினார்.
பா.ஜ.,வினர் சாலை மறியலை கைவிட்டு, மீண்டும் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு வந்த எஸ்.பி., ரவளிப்ரியா, இரு தரப்பின ரையும் கலைந்து செல்ல கூறினார். யாரும் கலைந்து செல்லாததால் பா.ஜ.,வை சேர்ந்த 75 பேரையும், வி.சி.க.,வை சேர்ந்த 15 பேரையும், போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, சிலையை சுற்றி போலீசார் தடுப்புகளை அமைத்து, 'சிசிடிவி' கேமரா பொருத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால், நாஞ்சிக்கோட்டை சாலையில், நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பரபரப்பு நிலவியது; போக்குவரத்து பாதித்தது.
சிலையை பொது இடத்தில் இருந்து மாற்றி வைக்க கோரி, நெடுஞ்சாலை துறை மூலம், தனியார் அமைப்பினருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, 'கருப்பு' முருகானந்தம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று, புதுக்கோட்டையில், பா.ஜ., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போக செய்தனர்.